Thursday 23 July 2020

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையும் குறிப்பதாகவே நான் கருத்தில் கொள்கிறேன். அறிவியலும் மூடநம்பிக்கைகளும் எக்காலத்திலும் ஒன்றுக்கொன்று எதிரானது. அத்தகைய அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி குழந்தைகள் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பதென்பது முரணானது மட்டுமல்ல மிகுந்த வேதனையானதும் கூட.

முதலில், ஊடகங்களின் தாயாகவும் முதன்மையானதாகவும் விளங்குகின்ற திரைப்படங்களை எடுத்துக் கொள்வோம், பட பூஜையில் தொடங்கி வெளிவருவது வரை மூட நம்பிக்கைகளால் நிரம்பி வழிவது திரைப்படத்துறை, இவர்கள் வெளியிடும் திரைப்படங்கள் மட்டுமென்ன அறிவியலையும் பகுத்தறிவையுமா பேசப் போகிறது. மூடநம்பிக்கைகளை மனதில் விதைத்து அதை வளர்த்தெடுப்பதில் பெரும்பங்கு திரைப்படங்களுக்கே உண்டு.

பாம்பு பால் குடிப்பது, மிருகங்கள் பழிவாங்குவது, வேப்ப மரத்தில் பால் வடிவது, அம்மைக்கு மருத்துவம் பார்க்கக் கூடாதென்பது, சகுனம் பார்ப்பது, சடங்கு செய்வது, மண்சோறு தின்பது, தீ மிதிப்பது, அலகு குத்துவது, பால் குடம் எடுப்பது, காவடி தூக்குவது, குறி சொல்வது, கோடாங்கி அடிப்பது, செய்வினை செய்வது, திருஷ்டி கழிப்பது, பேய் விரட்டுவது, சாமி ஆடுவது, தாலி மஞ்சள் குங்குமம் என அழுது புலம்புவது, அப்பப்பா திரைப்படங்களால் தான் எத்தனை எத்தனை மூடநம்பிக்கைகள் விதைக்கப்படுகின்றன. நீங்களே சொல்லுங்கள் பேய்ப் படங்களையும் சாமிப் படங்களையும் கண்டு ரசிக்காத எந்தக் குழந்தையாவது உண்டா. பிஞ்சுகளின் நெஞ்சில் மூடநம்பிக்கை எனும் நஞ்சை விதைத்து வளர்த்து வருகின்றன திரைப்படங்கள். மூட நம்பிக்கைகளை ஒழிக்க காலமெல்லாம் பரப்புரை செய்து பகுத்தறிவாளர்கள் போராடி வரும் வேளையிலே, பல கோடிகள் செலவு செய்து படம் எடுத்து மூடநம்பிக்கைகளை வளர்த்து வருகிறது ஒரு முட்டாள் சுயநலக் கூட்டம்.

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பார்கள், ஆம் நான் சின்னத்திரை என்னும் தொலைக்காட்சியைப் பற்றித்தான் சொல்லுகிறேன். காலை எழுந்ததுமே அந்த ராசி நேயர்களே இந்த ராசி நேயர்களே என்று பொய் சொல்ல ஆரம்பித்து விடுகிறது ஏமாற்றுக் கூட்டம். இது எவ்வளவு பெரிய மூடநம்பிக்கை. 2020 சிறப்பாக இருக்கும் என்று சொன்ன யாரவது ஒரு ஜோசியர் கொரோனா வருமென்று சொன்னாரா, யாருமே சொல்ல வில்லையே. இது மட்டுமா மூடநம்பிக்கையை வளர்க்கும் புராணத் தொடர்களையும் பாம்புத் தொடர்களையும்தானே ஒளி பரப்பிக் கொண்டிருக்கின்றன அனைத்துத் தொலைகாட்சிகளும். இவற்றை விரும்பிப் பார்க்கும் சின்னஞ்சிறு குழந்தைகள் மனதில் மூடநம்பிக்கைகள் வளரத்தானே செய்யும். ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை எனும் விதத்தில் அனைத்து மதங்களும் அவர்களுக்கென்று தனித்தனியாக பல தொலைக்காட்சி ஊடகங்களை வைத்துக்கொண்டு  மதக் கருத்துக்களை பரப்புகிறோம் என்று சொல்லி மூடநம்பிக்கைகளைத்தானே விதைத்து வருகின்றன. இவைகளிடமிருந்து நம் பிஞ்சுகளை எவ்வாறு காக்கப் போகிறோம்.

மூடநம்பிக்கையை வளர்ப்பதில் அச்சு ஊடகங்கள் ஒன்றும் குறைந்ததல்ல, ராசி பலன் வராத எந்த செய்தித் தாளாவது உண்டா, குழந்தைகளுக்கென வெளிவரும் மலர்களிலும் கதைப் புத்தகங்களிலும் பாட்டுகளிலும் கூட அறிவியலுக்குப் புறம்பான  மூடநம்பிகையைத்தான் விதைக்கின்றன அவை. இத்தோடு மட்டுமல்லாமல் ஆன்மிக மலர், பக்தி மலர் என மூடநம்பிக்கையை வளர்ப்பதற்கு இலவச இணைப்புகள் வேறு.

வலையொலி, முகநூல், புலனம் ஆகியவற்றை கைகளில் வைத்துக்கொண்டு, சுய சிந்தனை அற்ற தற்குறிக் கூட்டம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை, உண்மைத் தமிழனாய் இருந்தால் அதிகம் பகிரவும் என்று சொல்லி மூடக்கருத்துகளையும் மூட நம்பிக்கைகளையும் பரப்பிவருகிறதே இதனை நாம் என்னவென்று சொல்லுவது.

எதனையும் பகுத்தறிவோடும் அறிவியல் கண்ணோட்டத்தோடும் பேசி வரும் நாம் இன்னும் மிக முனைப்போடு செயல் படவேண்டியது காலத்தின் தேவை. நாம் மெத்தனமாக இருந்தால் நம் குழந்தைகளின் மனதில் மூட நம்பிக்கையை விதைத்து அதனை வளர்த்து நம் குழந்தைகளை முட்டாள்களாக மாற்றிவிடும் இந்த ஊடகங்கள்.

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...